தீபாவளியை முன்னிட்டு விடுமுறை நாளில் சென்னை, புறநகர் பகுதி துணி கடைகளில் குவிந்த மக்கள்: சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைக ள், பொருட்கள் வாங்குவதற்காக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று கூடிய மக்கள் கூட்டம். படம்: பு.க.பிரவீன்
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைக ள், பொருட்கள் வாங்குவதற்காக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று கூடிய மக்கள் கூட்டம். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளநிலையில், விடுமுறை நாளானநேற்று சென்னையில் இறுதிக்கட்ட தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனால் தியாகராயநகர் மற்றும் வண்ணாரப்பேட்டையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இந்த ஆண்டு தீபாவளி வரும் 24-ம் தேதி வருகிறது. இதனால் மக்கள் வெள்ளிக்கிழமை மாலை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணத் திட்டம் வகுத்து வருகின்றனர். அதனால் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்புவரும் கடைசி விடுமுறை நாளானநேற்றே குழந்தைகள், குடும்பத்தினர், பெற்றோர், உறவினர்களுக்குப் புத்தாடைகளை வாங்க மக்கள் துணிக் கடைகளுக்குச் சென்றனர்.

இதனால் மாநகரில் துணிக் கடைகள் நிறைந்திருக்கும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், புரசைவாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வட சென்னையில் பழையவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள எம்சி சாலையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அந்த சாலையில் மக்கள் நடந்துசெல்ல மட்டும் போலீஸார் அனுமதித்தனர். வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் ரயில் மூலம் தியாகராய நகரில் உள்ளதுணிக் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். புறநகர் பகுதிகளான பாடி, போரூர், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் உள்ளவணிக வளாக துணிக் கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது.

அனைத்து கடைகளிலும் கூட்டம்

சென்னை, புறநகர் பகுதிகளில் துணிக் கடைகள் மட்டுமல்லாது, உணவகங்கள், இனிப்பகங்கள், தின்பண்ட கடைகள், டீக்கடைகள், ஐஸ் கிரீம் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தில் திருட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க துணிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவி போலீஸார் கண்காணித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in