Published : 17 Oct 2022 07:20 AM
Last Updated : 17 Oct 2022 07:20 AM

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக திருக்குறள், தொல்காப்பியம் உட்பட பிரெய்லி வடிவில் 46 தமிழ் நூல்கள் உருவாக்கம்

சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் படித்து பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள்,பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.தமிழ் செவ்விலக்கிய நூல்களைஉலக மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டங்களை செம்மொழி நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது. இதுதவிர, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், தொல்லியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், செவ்வியல் நூல்களின் சிறப்புகளை யூ-டியூப் மூலம் பரப்புதல் போன்ற திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.

இதைத் தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புதிட்டமும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இதில் 41 நூல்கள் செவ்வியல் நூல்கள் ஆகும். இவை அனைத்தும் எளிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும். பின்னர், நூல்கள் அச்சிடப்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x