Published : 17 Oct 2022 07:07 AM
Last Updated : 17 Oct 2022 07:07 AM

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழகதலைமை செயலாளர் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பெருங்குடி மண்டலம் அணை ஏரியிலிருந்து உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருவடிகால் பணி, அணைஏரியிலிருந்து வேளச்சேரி தாம்பரம் நெடுஞ்சாலை வரை மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் அமைப்பு பணிகளை தலைமை செயலாளர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல ஏதுவாக நூக்கம்பாளையம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி, டி.எல்.எப் பகுதியில் பாலம் அமைக்கும் பணி, சோழிங்கநல்லூர் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர், வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் திருவள்ளூர் சாலை மற்றும் கைக்கான் குப்பம் ஆகிய பகுதிகளில் சுமார் 2,600 மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், திருவிக நகர்மண்டலம் கொளத்தூர் ஏரி மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தமிழச்சிதங்கபாண்டியன் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், கணபதி, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x