

தமிழகத்தில் மதுரை மாநகர் மாவட்டம் உட்பட காலியாக உள்ள மாவட்டங்களுக்கு விரைவில் மாவட்டத் தலைவர்களை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் டாக்டர் சரவணன். மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது 2 மாதங்களுக்கு முன்பு காலணி வீசப்பட்டது. இச்சம்பவத்துக்கு பிறகு, பாஜகவில் இருந்து சரவணன் விலகினார்.
இதையடுத்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் மகா சுசீந்திரன், மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பதவி 2 மாதங்களாக காலியாக உள்ளது. மதுரை புறநகர் மாவட்டமானது மதுரை கிழக்கு (மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் தொகுதிகள்) மதுரை மேற்கு (திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகள்) என 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளன.
மதுரை மாநகர், திருவாரூர், கடலூர் மாவட்ட பாஜக தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. புதிய தலைவர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் முருகன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி, பாஜக எம்எல் ஏக்கள் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், கடந்த வாரம் மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத் தலைவராக யாரை நியமித்தாலும், நீண்ட காலம் கட்சியில் இருப்பவர்களையே தலைவராக நியமிக்க வேண்டும், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை தலைவராக நியமித்தால், புதிய கோஷ்டி தான் உருவாகும், கட்சிக்கு அவரால் எந்த பலனும் இல்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கட்சியின் மையக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில், அரசு தொடர்பு பிரிவு மாநிலச் செயலாளர் எம்.ராஜரத்தினம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.ரவிபாலா, வர்த்தக பிரிவு செயலாளர் எம்.கார்த்திக்பிரபு ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் ராஜரத்தினம், ரவிபாலா ஆகியோர் மாவட்ட தலைவராக இருந்துள்ளனர். கார்த்திக்பிரபு மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். இவர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிதாக தொடங்கப்படும் மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு தற்போதைய புறநகர் மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு தலைவர் கோசா பெருமாள் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், மதுரை மேற்கு மாவட்ட தலைவராக தொடர வாய்ப்புள்ளது. மதுரை மாநகர் மாவட்டம் உட்பட காலியாக உள்ள மாவட்டங்களுக்கு ஓரிரு நாளில் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.