

கடந்த காலத்தில் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் மேடை நடன நிகழ்ச்சி பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
நேரில் பார்க்க முடியாத அபிமான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போல், தத்ரூபமாக வேடமணிந்து, அவர்களை போல சினிமா பாடல்களுக்கு ஆடி, பாடி, பேசி, பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்கள், நகரங்களில் கோயில் திரு விழாக்களில் போலீஸார் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதால் மேடை நடன கலைஞர்கள், வேலைவாய்ப்பு இழந்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலுக்கு வர விரும்பாததால் இந்த தலைமுறையுடன் இந்த மேடை நடனக்கலை அழியும் அபாயத்தில் இருப்பதாக அந்த கலைஞர்கள் ஆதங்கம் அடைந்து ள்ளனர்.
இதுகுறித்து தென் மாவட்ட மேடை நடன நாட்டிய கலைஞர்கள் நலச்சங்க தலைவர் கே.ரஞ்சித் குமார் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் உள் ளனர். தென்மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் தடை விதித்து அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். போலீஸாரை மீறி அனுமதி பெற வேண்டுமென்றால், விழா ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டிய துள்ளது. இதற்கு அதிக செலவாவதால் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.
எம்ஜிஆர், சிவாஜி, சந்திரபாபு முதல், தற்போதைய நடிகர்கள் அஜீத், விஜய் வரை வேஷம் போட்டு மக்களை சந்தோஷப் படுத்திய நாங்கள், தற்போது எங்கள் சந்தோஷத்தை இழந்து தவிக்கிறோம். வருமானம் இல் லாமல் பழக்கமில்லாத கட்டிடத் தொழில்களுக்கு செல்கிறோம். கோயில் திருவிழாக்களில், ஊர் விழாக்களில் எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் போலீஸார், தேர்தல் நேரங்களிலும், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வரும் நிகழ்ச்சிகளிலும் மட்டும் கூட்டத்தை திரட்டுவதற்கும், அவர்கள் வரும்வரை கூட்டம் கலைந்து போகாமல் இருப்ப தற்காகவும் உடனே அனுமதி வழங்குகின்றனர். இது எந்த விதத் தில் நியாயம்.
கடந்த திமுக ஆட்சியில் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு முழுமையாகவே அனுமதி மறுக்கப்பட்டது. அதிமுக அரசு நிரந்தர தடை விதிக்காவிட்டாலும், போலீஸார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். இந்த மாதம் கடைசி முதல் கோயில் விழாக்கள் நடக்கத் தொடங்கும். அதனால், அரசு மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்த முன்புபோல் தடையில்லா அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
போலீஸார் பற்றாக்குறை காரணமா?
இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,
கோயில் திருவிழாக்களில் மேடை நடன நிகழ்ச்சிகள் நடந்தால், சுற்றுவட்டாரங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் திரளும். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். காவல்நிலையங்களில் தற்போது அன்றாட வழக்குகள் விசாரணைக்கே ஆளில்லாமல் போலீஸார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், இதுபோன்ற மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை, என்றார்.