

வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணங்கள் வைத்திருந்தாலும், வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்குரிமையை செலுத்த முடியும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு நவம்பர் 19-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி, அரவக்குறிச்சியில், 97 ஆயிரத்து 100 ஆண்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 247 பெண்கள் என 2 லட்சத்து 347 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சையில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 146 ஆண்கள், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 352 பெண்கள், 18 இதர பாலினத்தவர் என 2 லட்சத்து 68 ஆயிரத்து 516 பேர் உள்ளனர். திருப் பரங்குன்றத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 329 ஆண்கள், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 629 பெண்கள், 22 இதர பாலினத்தவர் என 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர்கள் பெயர்கள், புகைப்படங்கள் அடங்கிய பட்டியல், அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நவம்பர் 18-ம் தேதி வழங்கப்பட்டுவிடும். அப்பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நவம்பர் 19-ம் தேதி வாக்களிக்க முடியும். தேர்தலின் போது வாக்குச்சாவடியில் காட்ட வேண்டிய அடையாள ஆவணம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன், புகைப்பட வாக்காளர் அடை யாள அட்டையை, தங்கள் அடை யாளத்தை மெய்ப்பிக்க அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப் பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், மாற்று அடையாள ஆவணங்களை அளிக்கலாம். இந்த வகையில், கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத் துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப் பட்ட ஸ்மார்ட் கார்டு, தேசியஊரக வேலை உறுதித்திட்ட பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கலாம்.
தொகுதி மாறிய வாக்காளர் தான் வசித்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடை யாள அட்டையை, ஆவணமாக பயன் படுத்தலாம். ஆனால், வாக்களிக்கும் தொகுதியின் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் கூறியுள்ள அடையாள ஆவணங்கள் வைத்திருந்தாலே ஒரு வாக்காளர் தன் வாக்கை செலுத்தி விட முடியாது. வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்குரிமையை செலுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.