Published : 16 Oct 2022 06:36 AM
Last Updated : 16 Oct 2022 06:36 AM
சென்னை: கல்லூரி மாணவி சத்யா கொலை தொடர்பாக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 28 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20) இளைஞர் சதீஷ் (23) கடந்த 13-ம் தேதி மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சோகம் தாளாமல் மாணவியின் தந்தையான கால் டாக்ஸி ஓட்டுநர் மாணிக்கம் தற்கொலை செய்துகொண்டார். தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சதீஷை கைது செய்தனர்.
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் மாம்பலம் ரயில்வே போலீஸார் நேற்று ஒப்படைத்தனர்.
டிஎஸ்பிக்கள் செல்வகுமார், புருஷோத்தமன் தலைமையில் 5 பெண் காவல் ஆய்வாளர்கள் கொண்ட சிபிசிஐடி குழுவினர் நேற்று மதியம் தங்கள் விசாரணையை தொடங்கினர். பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்று, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
கொலை நடந்தபோது, ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தனர். அந்த ரயிலை இயக்கிய ஓட்டுநர், மாணவி தனது ரயில் முன்பு வந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகளிடம் என்ன தகவலை அளித்துள்ளார் என்றும் விசாரித்தனர்.
பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும்அதை சுற்றியுள்ள 28 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சிபிசிஐடி போலீஸாரின் ஒரு பிரிவினர் ஆய்வு செய்தனர். சத்யா, சதீஷ் எந்த வழியாக ரயில் நிலையத்துக்குள் வந்துள்ளனர், ரயில் நிலையத்தில் எங்கெல்லாம் நின்று, எவ்வளவு நேரம் பேசினர், எப்போது வாக்குவாதம் ஏற்பட்டது, ஏன் மோதலாக மாறியது என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் இருந்து மாணவியின் உடலை தூக்கிய ஊழியர்களிடமும் விசாரித்தனர்.
ரயில் ஓட்டுநர், மாணவி சத்யாவின் தோழிகள், சம்பவத்தை நேரில் பார்த்ததாக தொலைக்காட்சிகளில் பேசியவர்கள், மாணவியின் தாய், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி சிபிசிஐடி போலீஸார் தகவல்களை சேகரிக்க உள்ளனர். சதீஷின் நடவடிக்கைகள் குறித்து, அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
கடும் தண்டனை அவசியம்
மாணவி சத்யாவை கொலை செய்தவருக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பெண்களை போகப் பொருளாக கருதும் ஆணாதிக்க கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இந்த படுகொலையை கருத வேண்டியுள்ளது. சதீஷ் குறித்துசத்யா தரப்பில் கூறப்பட்ட புகார்களை காவல் துறை புறந்தள்ளியது நியாயமற்றது. இந்த கொடூர கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தாராளமான போதைப்பொருள் புழக்கம், கலாச்சார சீரழிவுகள், ஒருசில திரைப்படங்களின் தவறான வழிகாட்டுதல் போன்றவையே இளைய சமுதாயத்தின் மனதில் வக்கிர சிந்தனைகளை வளர்க்கின்றன. இதில் இருந்து அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
சமக தலைவர் சரத்குமார்: வருங்காலங்களில் எந்தவொரு சூழ்நிலையிலும், பிற உயிரை கொல்லும் துணிவுயாருக்கும் வராத வகையில் முன்மாதிரியான தண்டனை, குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும்.
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி: சத்யாவை கொன்று அவரது தந்தையின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளார் சதீஷ். இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என உணர வைக்கும் வகையில் அவருக்கான தண்டனை அமைய வேண்டும்.
நடிகை கஸ்தூரி: விருப்பம் இல்லாத பெண்ணை விடாமல் தொடர்ந்து காதல் செய்வதுதான் விடாமுயற்சி, வீரம் என நம்பி தொந்தரவு செய்பவர்களை மட்டுமல்ல, அவ்வாறு செய்ய தூண்டியவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும். அது எந்த தலைவனாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சதீஷ் அடைக்கப்பட்ட சிறையில் கூடுதல் பாதுகாப்பு
சத்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் சதீஷ், 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவர் விடிய விடிய தூங்காமல், சத்யாவையே நினைத்து புலம்பியதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ல்மென்பொறியாளர் ஸ்வாதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சத்யா கொலை வழக்கிலும் அதேபோல நடந்துவிடாமல் தடுக்கும் வகையிலும், பிற கைதிகளால் ஆபத்து நேராத வகையிலும் புழல் சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, இளைஞர் சதீஷை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக போலீஸார் கண்காணித்து வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT