

வால்பாறையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டக் கழகத்தை கைவிட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வால்பாறை அடுத்த சின்கோனாவில் 1990-ம் ஆண்டு ‘டான்டீ’ தேயிலை தோட்டக் கழகம் தொடங்கப்பட்டது. 6,780 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டது. இந்த எஸ்டேட்களில், 2,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதால், அதில் 4,000 ஏக்கர் நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வனவிலங்கு- மனித மோதல் தொடர்ந்து அதிகரிப்பதால், அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறினர். தற்போது 500-க்கும் குறைவான தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர்.
‘டான்டீ’ நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு ‘டான்டீ’ தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், வால்பாறையில் தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அமீது, எல்பிஎப் தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டத்தை மூடுவதை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதையும் மீறி தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால், தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு தலா மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.