Published : 16 Oct 2022 04:40 AM
Last Updated : 16 Oct 2022 04:40 AM

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2.50 டன் வாழைப் பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

தஞ்சாவூர்

வாழைப் பழங்களின் விலை வீழ்ச்சியால் வீணாக்க மனமில்லாமல், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, விவசாயி ஒருவர் 2.50 டன் வாழைப் பழங்களை நேற்று இலவசமாக வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன்(50). விவசாயி. கரோனா ஊரடங்கின்போது வாழைப்பழ விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டதால், இவரது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழதார்களை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

அதன்பின், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வாழைப் பழங்களை மதியழகன் அவ்வப்போது இலவசமாக வழங்கி வருகிறார். அதன்படி, நேற்று சுமார் 2.50 டன் வாழைப் பழங்களை சுமை ஆட்டோ மூலம் ஏற்றிக்கொண்டு வந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனிடம் மதியழகன் ஒப்படைத்தார்.

அவற்றை பெற்றுக்கொண்ட முதல்வர் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் ச.மருதுதுரை, மருத்துவ நிலைய அலுவலர் செல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் விவசாயி மதியழகனை வெகுவாக பாராட்டினர். இது குறித்து மதியழகன் கூறியதாவது: தற்போது வாழைப் பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை.

எனவே, பல விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிடுகின்றனர். வாழை மரத்திலேயே பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க, வாழைத்தாரை வெட்டி, வாகனத்தில் ஏற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்காக வழங்கியுள்ளேன்.

தமிழக அரசு வாழை விவசாயிகளிடம் இருந்து வாழைப் பழங்களை கொள்முதல் செய்து, அரசுப் பள்ளிகளில் சத்துணவுடன் சேர்த்து வழங்கினால் மாணவர்களுக்கும் சத்தான உணவு கிடைப்பதுடன், விவசாயிகளுக்கு வருவாயும் கிடைக்கும். இது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x