Published : 23 Nov 2016 10:32 AM
Last Updated : 23 Nov 2016 10:32 AM

வேளாண் கல்லூரிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடம்: செடிகள் வளரும் காலநிலையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி

காய்கறி, மலர்கள், சிறுதானியச் செடிகள் வளரும் காலநிலையை கண்டறியவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுகளுக்காகவும் வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில்கள் (Hightech green houses) அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆரம்பத்தில் உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில் வேளாண் சாகுபடி அபூர்வமாக இருந்தது. அதுவும் ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆஸ்டர் உள்ளிட்ட மலர்களை இந்த பசுமைக் குடில்களில் பெரும் விவசாயிகள் மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மழைஇல்லாமல் பருவநிலை மாற்றத் தால் காய்கறிகள், மலர்கள், உணவுதானிய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் தற்போது காய்கறி களை உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில்களில் அதிகளவு சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

காய்கறி, மலர் சாகுபடியில் திறந்தவெளியில் சாகுபடி செய்வதைக் காட்டிலும், பசுமைக் குடிலில் இருமடங்கு உற்பத்தி கிடைக்கிறது. செடிகள் மீது புற ஊதாக் கதிர்கள் நேரடியாக படுவது தவிர்க்கப்படுவதால், பசுமைக் குடிலில் உற்பத்தியாகும் காய்கறிகள், பூக்கள் தரமாக இருக்கின்றன. அதிகப்படியான மழை பெய்தால் செடிகளும் சேதமடையாமல் தப்பிக்கின்றன. வழக்கத்துக்கு மாறான வெப்பம், காற்று, குளிர் அடித்தால் அதைச் சமநிலைப்படுத்தி செடிகளுக்குத் தேவையான காலநிலையை செயற்கையாக ஏற்படுத்திக் கொடுக்கும் உயர் தொழில்நுட்ப வசதிகள், பசுமைக் குடிலில் இருக்கின்றன.

அதனால், பசுமைக்குடில் அமைக்க தோட்டக்கலைத் துறை மானியம் வழங்கி விவசாயி களை ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளை ஊக்குவித்தால் மட்டும் போதாது. அதற்கான தொழில்நுட்ப ஆலோசனை, எந்தெந்த செடிகளை எந்தெந்த காலநிலையில், எந்த இடங்களில் வளர்க்கலாம் என்பதை ஆராய்ச் சிகள் மூலம் கண்டுபிடித்து தெரிவிப்பதற்கு தற்போது, அந்தந்த மாவட்ட வேளாண்மை பல்கலைக் கழக கல்லூரிகளில் உயர் தொழில்நுட்ப பசுமை குடோன் ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில், உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில் அமைக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக மதுரை வேளாண்மை கல்லூரி யில் ரூ.20 லட்சத்தில் உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பசுமைக் குடிலில் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து மதுரை வேளாண் கல்லூரி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் செந்தில் கூறியதாவது:

செடிகள் வளர காலநிலையும், மண் வளமும் மிக முக்கியம். மண் வளத்தை செயற்கையாக ஏற்படுத்த முடியாது. அதற்கான காலநிலையை செயற்கையாக ஏற்படுத்தலாம். அதற்கு இந்த உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில் உதவுகிறது. வெப்பம், வெளிச்சம், கரியமில வாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர் தேவை, பயிர் சத்துகளின் தேவை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு போன்றவையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு செடியை அதிக குளிரிலும் வளர்க்கலாம். வெப்பத்திலும் வளர்க்கலாம். காலநிலை கட்டுப்பாட்டை இழந்து சென்று விட்டால், அவற்றை இந்த பசுமைக் குடில் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒரு செடிக்கு எந்த வகையான காலநிலை தேவைப்படுகிறது, எந்த இடத்தில் வளர்க்கலாம், எந்த காலநிலையில் செடிகள் பாதிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள், இந்த உயர் தொழில்நுட்ப பசுமைக் குடிலில் மேற்கொள்ளப்படுகின்றன.

மலர்கள், காய்கறிகள் தவிர நெல், சிறு தானியங்களைக் கூட இந்த பசுமைக் குடிலில் வளர்க்கலாம். அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.மதுரை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x