

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் க.செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி முறையாக எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிக்காமல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவுபெறாமல், அலோபதி மருத்துவம் செய்யும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதற்குரிய சட்டப்பிரிவும், மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலி டாக்டர்கள் பற்றிய புகார்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் quackery@tamilnadumedicalcouncil.org என்ற மின்னஞ்சல் மூலம் பெறப்படுகிறது. அவை விசாரித்து, முகாந்திரம், சாட்சியங்கள் இருக்கும்பட்சத்தில் போலி டாக்டர்கள் ஒழிப்பு சட்டப்பிரிவினருடன் ஆலோசித்து போலி டாக்டர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
செப்.13-ல் சேலத்தில் பிஹெச்எம்எஸ் (BHMS) படித்துவிட்டு எலும்பு நோய் சிறப்பு டாக்டர் என சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீதும், அக்.3ல் காரைக்குடியில் எம்பிபிஎஸ் படிக்காதவர், இருதய டாக்டர் என சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோல், பல போலி டாக்டர்கள் ஊடகங்கள் வழியாக விளம்பரங்கள் செய்து தவறான சிகிச்சை அளித்து ஏமாற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டந்தோறும் போலி டாக்டர்கள் குறித்த புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்க கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கலாம் அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கலாம்.
தமிழகத்தில் அதிகப்படியான பதிவு பெற்ற மருத்துவர்கள் இருக்கும் நிலையில் போலி டாக்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யும் போலி டாக்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிறைவேற்றி அதற்குரிய சட்டப்பிரிவு மற்றும் அலுவலர்களை தற்போது நியமித்துள்ளது. விரைவில் அத்தகைய போலி மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.