Published : 15 Oct 2022 07:19 PM
Last Updated : 15 Oct 2022 07:19 PM
மதுரை: “எப்போதும் மாப்பிள்ளைபோல் இருக்க வேண்டுமா? மாப்பிள்ளை சம்பா ரகம் சாப்பிடுங்கள். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதால் இப்போது அனைவரும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ருசிகரமாக பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில உழவர் தின விழா நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். வேளாண்மை - உழவர் நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, துணைவேந்தர் வெ.கீதாலெட்சுமி முன்னிலை வகித்தனர்.
உழவர் தின விழாவில் கண்காட்சியை துவக்கிவைத்தும், விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும் வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: “விவசாயிகள் நலனுக்காகவும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவித்தும் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 92 லட்சம் விவசாயிகள் 34 லட்சம் ஹெக்டேரில் நெல் உற்பத்தி செய்கின்றனர். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மன்னர்கள் மட்டும் சாப்பிட்ட மாப்பிள்ளை சம்பா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதால் இப்போது எல்லோருக்கும் சாப்பிடும் ஆர்வம் வந்துவிட்டது. எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க வேண்டுமா? மாப்பிள்ளை சம்பா சாப்பிடுங்கள். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதால் இப்போது அனைவரும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்க்கரை நோய் காரணமாக தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். நானே மாப்பிள்ளை சம்பா, சீரகச்சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
விவசாயத்தில் டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்க கடந்த பட்ஜெட்டில் 60 டிரோன்கள் வாங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் அரிசியை ஜப்பான் நாட்டினர் கண்டுபிடித்து விற்கின்றனர். அதே தொழில்நுட்பத்தை நாமும் செய்ய வேண்டும். ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பையும் தேவையான நிதியுதவியையும் தமிழக அரசு செய்து வருகிறது. வேளாண்மைக் கல்லூரிக்கு விவசாயிகள் பிரதானம். விவசாயிகளோடு இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ மு.பூமிநாதன், மதுரை வேளாண்மைக் கல்லூரி முதல்வர் ப.மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT