

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில், 2 மீனவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத் தைச் சேர்ந்த செல்லத்துரைக்குச் சொந்தமான விசைப்படகில் தமிழ் மணி, மணி முருகன், சரவணன், அரவிந்தன், பாலமுருகன் உட்பட 12 மீனவர்கள் கடந்த 13-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்குத் தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர் களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் கல்லால் தாக்கிய துடன், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், நாகப்பட்டினம் நம்பி யார் நகரைச் சேர்ந்த அஞ்சப்பன் மகன் அரவிந்தன்(20) காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் என்ற பாலமுருகன்(28) ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதனையடுத்து படகை வேகமாகத் திருப்பியதால் உயிர் தப்பினர்.
நேற்று அதிகாலை காரைக்கால் துறைமுகத்துக்கு மீனவர்கள் வந்து சேர்ந்தனர். காயமடைந்த இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக் காக புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப் பட்டனர்.
திடீரென்று சுட்டனர்
அங்கு சிகிச்சை பெற்றுவரும் அரவிந்தன் கூறியபோது, “நாங்கள் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்தபோது இலங்கை ராணுவத் தினர் வந்தனர். முதலில் கல்லால் தாக்கினர். அதையடுத்து திடீ ரென்று சுடத் தொடங்கியதால் நாங்கள் படகை காரைக்கால் நோக்கி வேகமாக ஓட்டிக்கொண்டு கரை சேர்ந்தோம்” என்றார்.
மருத்துவர்களிடம் விசாரித்த போது, “அபாயகட்டத்தை தாண்டி யுள்ளனர். துப்பாக்கி குண்டில் இருந்த மெட்டல் துகள் உடலில் இருக்கிறதா என்று பார்த்தோம். அதுபோல ஏதும் இல்லை” என்ற னர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
நடவடிக்கை வேண்டும்
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படாது என இலங்கை அமைச்சர் டெல்லியில் அறிவித்த ஒரே வாரத்தில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் தமிழக புதுச்சேரி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து, மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் பின் னர் செய்தியாளர்களிடம் கூறிய போது, “மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இச்சம்பவம் குறித்து தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ கூறியபோது, “தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீது துப் பாக்கிச் சூடு நடத்தியது கண்டனத் துக்குரியது, இது தொடர்பாக மத்திய அரசிடம் புகார் தெரிவிக் கப்படும்” என்றார்.