

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்கள் கிராமத்தை பாதுகாப்பதற்கான வழியை தெரிவிக்க வேண்டும் என்று ஏகனாபுரம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று (அக்.15) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் “பசுமைவெளி விமான நிலையம்“ அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அவர்களுடைய நிலத்தினை கையகப்படுத்த ஆட்சேபணை தெரிவித்ததால், முதலமைச்சர், விவசாயிகளை நேரிடையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், இரவிச்சந்திரன், கதிரேசன். கருணாகரன், கணபதி, சுப்பிரமணியன், முனுசாமி, இளங்கோ ஆகிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 2400 மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் கம்பக்கால்வாய் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தக்கூடிய பகுதியில் உள்ளது. எங்கள் கிராமமே ஒரு சமத்துவபுரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வழியினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
முதலமைச்சர் ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவித்ததோடு, கிராம மக்களின் கோரிக்கையை, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், 17ம் தேதியன்று அவர்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி, மேற்கொள்ள இருந்த நடைபயணத்தை கைவிடுவதாக உறுதியளித்தனர்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.