

திருச்சி: ஆறுகளில் வீணாகும் நீரை சேமித்து வைக்க அணைகள் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொள்ளிடம் பாலப்பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொறியாளர்களிடம் முக்கொம்புக்கு வரும் நீரின் வரத்து, நீர் வெளியேற்றம், புதிய அணையின் கொள்ளளவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “முக்கொம்பு மேலணை மற்றும் பாலங்கள் விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, தென்பென்னை போன்ற ஆறுகளில் வீணாகும் நீரை ஆண்டுதோறும் 2 அணைகளில் தேக்கி வைக்க குறிக்கோள் இருக்கிறது. பழைய காலத்தில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்துவிட்டு சாத்தியமில்லை என விட்டுவிட்டார்கள். வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லை என விட்டுவிடமுடியாது. நவீனத்தை பயன்படுத்தி அதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும். காவிரி-குண்டாறு திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. சரபங்கா திட்டத்தால் ஒரு சொட்டு நீர் கூட ஏரி, குளங்களுக்கு கொடுக்கவில்லை. ஊழலுக்காக ஆங்காங்கே குளம், ஏரிகளை தூர்வாரும் பணியை மட்டும் செய்துவிட்டு இணைப்பு செய்யப்படவில்லை. மேலும் ஒரு பம்ப் பணியை கூட செய்யப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அப்போது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனியாண்டி, தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.