

மதுரை: அதிகாரிகள் தங்களை அறிவுஜீவிகளாக நினைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் விவசாயிகளிடம் திணிக்கக்கூடாது’ என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லெட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் கைலாசநாதர் கோயில் சாலையில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட தடை விதிக்கக்கோரி விஜயகுமார், குருசாமி, தினகரன், முரளி, ரேணுகா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் பாலங்கள் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் பாலம் கட்டப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அனைத்து கிராமங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் பொருந்தும் என்பது போல் அரசு கருத்து தெரிவித்துள்ளது. கைலாசநாதர் கோயில் சாலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறது. உக்கடை பாதை கிழக்கிலிருந்து மேற்காக செல்கிறது. இப்பாதைக்கு குறுக்கே மேம்பாலம் கட்டப்படுகிறது. இதனால் பாரம்பரியமாக மக்கள் பயன்படுத்தி வரும் பாதைக்கு பாதிப்பு ஏற்படும்.
விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாது என மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் பாலம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களிடம் கேட்காமல் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றிப்பெறாது. கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தான் கிராமங்களின் தேவை நன்றாக தெரியும். அதிகாரிகள் தங்களை அறிவுஜீவிகளாக நினைத்துக்கொண்டு எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகளிடம் திணிக்கக் கூடாது.
எனவே, மனுதாரர்கள் தமிழக அரசிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் வரை லெட்சுமிபுரத்தில் மேம்பாலம் கட்டும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.