

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் பெய்த கனமழையால் வாய்க்கால்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால் மணலாறு, வெள்ளாறு, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மலைப்பகுதி முழுவதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக தொரடிப்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நெல், கரும்பு, மக்காச்சோளம்,மரவள்ளி, பீன்ஸ் பயிர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.
மேலும், 10 மின்கம்பங்கள் , 3 மோட்டார்கள் மற்றும் பம்பு செட்டுகளும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது, 2000 பாக்குமர கன்றுகள் 800 சில்வர் மரங்கள் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டது. மேல்முருவம், தொராங்கூர், தாழ் தொரடிப்பட்டு, எழுத்தூர் மட்டப்பட்டு, எருக்கம்பட்டு, ஆகிய கிராமங்கள் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் காளை மாடுகள்,குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. தார் சாலை போடுவதற்காக வைத்திருந்த ஜல்லிகள் இருசக்கர வாகனங்களும் அடித்து செல்லப்பட்டது. இந்த கன மழை கல்வராயன் மலையில் பலத்த சேதத்தை உருவாக்கியுள்ளது. தார் சாலைகள் மற்றும் பல பாலங்கள் அடித்து செல்லப்பட்டள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு மக்களை பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அங்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வருவாய் துறையினர் மூலம் ஏற்பாடு செய்துவருகிறார்.