Published : 20 Nov 2016 03:25 PM
Last Updated : 20 Nov 2016 03:25 PM

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு இணையதளம் தொடங்க வேண்டும்: ராமதாஸ்

டெல்லியைப் போல, தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய வசதியாக புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், எத்தனை ஆணையங்கள் அமைக்கப்பட்டாலும் அழிக்க முடியாத முள்மரமாக வளர்ந்து நிற்பது கல்விக் கட்டணக் கொள்ளைதான். இந்த முள்மரத்தை தமிழக ஆட்சியாளர்கள் உரம் போட்டு வளர்த்துவரும் நிலையில், இதை அடியோடு அழிப்பதற்கான திட்டத்தை டெல்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய இணையதளத்தை அம்மாநில அரசு கடந்த 17ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் கட்டணக் கொள்ளை பற்றி பெற்றோர் புகார் செய்யலாம்.

இதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில், பெற்றோர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னர், அதற்கென கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் புகார் விவரங்களை பட்டியலிட்டு, அதை உறுதி செய்வதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு புகார் செய்தவுடன், அதற்கு அத்தாட்சியாக பதிவு எண் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, அடுத்த 15 நாட்களில் அப்புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை புகார்தாரருக்கு தெரிவிப்பர். புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; இதனால் டெல்லி மாநிலத்தில் கல்விக் கட்டணக் கொள்ளை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், டெல்லியை விட பல மடங்கு கல்வி கட்டணக்கொள்ளை தலைவிரித்தாடும் தமிழகத்தில் இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் அதைத் தடுக்க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆயிரமாயிரம் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏராளமான வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்குப் பிறகும் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. கட்டணக் கொள்ளைக்காக இதுவரை எந்த கல்வி கொள்ளையரும் தண்டிக்கப்பட்டதில்லை என்பது தான் உண்மை.

கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தொடர்ந்து நடத்தி வந்த போராட்டங்களின் பயனாக கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை இக்குழு முற்றிலுமாக கட்டுப்படுத்தவில்லை என்றாலும், ஓரளவு மட்டுப்படுத்த உதவியது. இக்குழுவின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் வரைமுறையின்றி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டன. இக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி சிங்காரவேலு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.

அனைத்து கல்வி நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், கட்டண நிர்ணயக் குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படாததால் பள்ளிகள் விருப்பம் போல் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றன. இதற்கு வசதியாகத்தான் கட்டண நிர்ணய குழுவின் தலைவர் பதவி கடந்த ஓராண்டாகவே காலியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த பதவியை கடந்த அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்ப வேண்டும் என 03.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை. தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைகள் குறித்து அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் புகார் அனுப்பினால், அடுத்த சில நாட்களில் அந்த மனு கட்டணக் கொள்ளை நடத்திய பள்ளி நிர்வாகியின் கைகளுக்கே வருவதையும், அதை வைத்துக் கொண்டு பெற்றோரை நிர்வாகி மிரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இந்த இடங்கள் பணக்கார மாணவர்களை கொண்டு நிரப்படுவதுடன், அவர்களை ஏழைகள் எனக் காட்டி அவர்களுக்கான கட்டணத்தை அரசிடம் வசூலிக்கும் கொடுமையும் நடக்கிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசை தனியார் பள்ளிகள் கட்டுப்படுத்தும் அவலம் தான் நிலவுகிறது. இது மாற்றப்படவேண்டும்.

அதற்காக, டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய வசதியாக புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும். அதில் பதிவு செய்யப்படும் புகார் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு துறை சார்ந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x