Last Updated : 15 Oct, 2022 07:12 AM

 

Published : 15 Oct 2022 07:12 AM
Last Updated : 15 Oct 2022 07:12 AM

‘சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் ரயில் முன் தள்ளினேன்’ - கைதான இளைஞர் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உடல்களை பார்த்து கதறி அழுத உறவினர்கள் . படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை: ‘‘எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக ரயில்முன்பு தள்ளி கொலை செய்தேன்’’ என்று கைதான சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். 15 நாள்நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளியது குறித்து போலீஸில் அவர் கூறியுள்ளதாவது: என் வீட்டின் அருகே உள்ள காவலர் குடியிருப்பில்தான் சத்யாவின் வீடும் உள்ளது. இதனால் அவரை அடிக்கடி பார்ப்பேன். அவரது தாய் ராமலட்சுமி, ஆதம்பாக்கத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததால் அவரையும் நன்கு தெரியும். நானும், போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ராமலட்சுமியும் என்னிடம் அன்பாக பேசுவார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது, சத்யா மீது காதல் ஏற்பட்டது. அவரை பின்தொடர்ந்து வந்தேன். ஒருநாள் அவரிடம் செல்போன் எண்ணை கேட்டேன். அவர் தரவில்லை. இதனால், அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் காதலை சொன்னேன். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார் சத்யா. அதுமுதல், வீட்டில் இருந்து தனியாக பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்தார். இதனால், நானும் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அவரிடம் பேசுவேன். படிப்பு, குடும்பம் குறித்து நான் அக்கறையோடு பேசியதால், சத்யாவுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நாளடைவில், என் காதலை ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு, அவர் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசி வந்தேன். சில நாட்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்துஎன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கல்லூரியிலும் விட்டுள்ளேன். கல்லூரி முடிந்த பிறகு, அவரது வீடு அருகிலும் விட்டுச் செல்வேன்.

நாங்கள் ஒன்றாக செல்வது குறித்து சத்யாவின் தாய்க்கு தெரிந்து, சத்யாவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் எங்கள் பழக்கம் தொடர்ந்ததால், ‘‘இனிமேல் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம்’’ என்றும் தெரிவித்துள்ளார். பலரிடம் விசாரித்ததில், என் மீது ராமலட்சுமிக்கு நல்லஎண்ணம் இல்லை. இதையும் மகளிடம்கூறிய அவர், ‘‘இனியும் நீங்கள் ஒன்றாகசுற்றினால், சாவதை தவிர வேறு வழி இல்லை’’ என்று மகளிடம் கூறியுள்ளார். இதை என்னிடம் கூறிய சத்யா, ‘‘எனக்கு என் அப்பா, அம்மா, குடும்பம்தான் முக்கியம். அதனால், என்னுடன் பேச வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார். சத்யா இப்படி கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனாலும், என் தரப்பு விளக்கத்தை கூறுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால்,செல்போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பார்க்கவில்லை. வாட்ஸ்அப் மூலம்அனுப்பிய மெசேஜையும் பார்க்காமலே நீக்கினார். இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சத்யாவிடம் இருந்த செல்போனை அவரது பெற்றோர் வாங்கி வைத்துக்கொண்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.

சதீஷின் ஆலந்தூர் வீடு முன்பு அவரது இருசக்கர வாகனம்.

நான் சத்யாவை சந்திக்க கூடாது என்பதற்காக, சத்யாவை அவரது பெற்றோரே தினமும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்தில் விடுவதும், கல்லூரி முடிந்த பிறகு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர். இதனால், சத்யாவிடம் பேசக்கூட முடியவில்லை. கடந்த 6 மாதத்துக்கு முன்பு, நேரடியாக சத்யாவின் கல்லூரிக்கு போய், ‘‘நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய். நீ இல்லாவிட்டால், நான் இல்லை’’ என்று கூறி அழுதேன். அப்போதும் அவர் பேசாததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் கல்லூரிக்கே வந்து சென்றது குறித்து, நிர்வாகத்துக்கு தெரியவர, சத்யாவின் பெற்றோரிடம் இதை தெரிவித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, சத்யாவை பின்தொடர்ந்து வந்து நான் தொந்தரவு செய்வதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்படி 2 முறை புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில், போலீஸார் என்னையும், என் தந்தையையும் நேரில் அழைத்து விசாரித்தனர். ‘இனிமேல் சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். அதன்பிறகும்கூட, சத்யாவை மறக்கமுடியவில்லை. தோழிகள் மூலம் சத்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். இதில் கோபமடைந்த அவர், ‘‘அவனது உறவு முறிந்துவிட்டது. இனிமேல், என்னை சந்திக்கவோ, பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்’’ என்று இறுதியாக சொல்லிவிட்டதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். என்னைவிட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்ததை அறிந்து மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

இந்த நிலையில்தான், சத்யாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தது தெரியவந்தது. இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு சத்யாவை திருமணம் செய்து வைக்க பேசி முடித்துள்ளதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன். கடைசியாக ஒருமுறை சத்யாவை நேரில் பார்த்து, காதலை ஏற்கும்படி சமாதானம் பேசலாம் என கருதிதான் பரங்கிமலை ரயில் நிலையம் வந்தேன். நடைமேடையில் தனது தோழியுடன் நின்றிருந்தார் சத்யா. அருகே சென்று பேசினேன். ‘‘வேலைக்கு சென்று உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை நம்பு’’ என்று கெஞ்சினேன். சத்யா அதை காதில் வாங்கவில்லை. என்னை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இது மிகுந்தஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக்கணக்கில் பழகியும், காதலை ஏற்க மறுக்கிறாரே என்ற கோபம் வந்தது. ‘எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது’ என்ற எண்ணம் எழுந்தது.

அப்போது, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. கடும் ஆத்திரத்தில் இருந்த நான், சத்யாவை காலால் எட்டி உதைத்து ரயில் முன்பு தள்ளினேன். ரயிலுக்கு அடியில் சிக்கினார் சத்யா. அங்கு இருந்தவர்கள் அய்யோ.. அம்மா.. என கூச்சலிட்டனர். கூட்டம்கூடியது. என்னை பிடித்து அடித்து உதைத்து விடுவார்களோ என்ற பயத்தில்அங்கிருந்து தப்பி ஓடினேன். எங்கு செல்வது என தெரியாமல் துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸார் பிடித்துவிட்டனர். இவ்வாறுஅவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ராமலட்சுமி தனது மற்ற 2 மகள்களுடன் சேர்ந்து, மாணிக்கம்–சத்யாஉடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார்.பின்னர், உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலந்தூரில் உள்ளதகன மேடையில் தகனம் செய்யப்பட்டன. தந்தை, மகள் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பெண்களை மதிக்க சொல்லி ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா: ஆணும், பெண்ணும் சமம். பெண்களை மதிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். காதலித்தால் சாகும் வரை இருவரும் ஒன்றாக தான் வாழ்ந்தாக வேண்டும் என்பது இல்லை. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்லும் மனநிலை இருவருக்கும் இருக்க வேண்டும். அப்படி பிரியும் போது, அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் இருவருக்கும் வரவேண்டும். “உன் கண்ணில் நீர் வழிந்தால்.. என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாடல் வரி போல் மென்மையான காதல் இருக்க வேண்டும். பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களில் ஆண் நுழையக்கூடாது. பிரச்சினை என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கையாக காவல் துறையின் உதவியை பெண்கள் நாட வேண்டும்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் முன்னாள் இயக்குநர் மருத்துவர் சத்தியநாதன்: ரயில் வரும்போது பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்வது ஒருவிதமான மனநல பிரச்சினை. அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது திட்டமிட்டு செய்வது அல்ல. அந்த நேரத்தில் ஆத்திரத்தில் செய்வதாகும். எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலை. பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், நாம் என்ன செய்கிறோம் என்று அந்த நேரத்தில் தெரியாமல் செய்வதாகும். அந்த பையனும் தற்கொலைக்கு முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. அவரை கண்காணிக்க வேண்டும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல் வரிக்கேற்ப பெற்றோர் குழந்தை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

‘போலீஸ் நடவடிக்கை எடுக்காததே காரணம்’

மாணவி சத்யா, சதீஷ் உடனான நட்பை துண்டித்த பிறகும், சதீஷ் அவரை பின்தொடர்ந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சத்யாவை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே ஒருமுறை சதீஷ் தாக்கியுள்ளார். இது மட்டுமின்றி, சத்யாவின் வீடு, அவரது கல்லூரிக்கு சென்றும் சதீஷ் பிரச்சினை செய்துள்ளார். இதுகுறித்து சத்யாவின் பெற்றோர் ஏற்கெனவே போலீஸில் புகார் கொடுத்தனர். சதீஷின் தந்தை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் என்பதால், ஒவ்வொரு முறை சதீஷ் பிரச்சினையில் ஈடுபட்டபோதும் அவரை போலீஸார் எச்சரித்தும், எழுதி வாங்கிக் கொண்டும் அனுப்பியுள்ளனர். அத்துமீறிய சதீஷ் மீது அப்போதே கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் சத்யாவை இழந்திருக்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் வேதனை யுடன் தெ ரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x