

கோவை/பொள்ளாச்சி: மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து கோவை உக்கடம் கோட்டைமேடு பிஎஃப்ஐ மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து வின்சென்ட் சாலை பிஎஃப்ஐ கிளை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதேபோல், மேட்டுப்பாளையம் கிளை பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு வட்டாட்சியர் மாலதி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பொள்ளாச்சி பிஎஃப்ஐ கிளை அலுவலகத்துக்கு பொள்ளாச்சி வட்டாட்சியர் முத்து வைரம் தலைமையிலான வருவாய்த் துறையினரும் சீல் வைத்தனர்.