Published : 15 Nov 2016 04:21 PM
Last Updated : 15 Nov 2016 04:21 PM

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதால் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணம் விநியோகித்து வருவதால் 3 தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதன் மீது மக்கள் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விடும் வகையில் தான் உள்ளன. தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வரும் நிலையில் அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பாமக சார்பில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரு நாட்களாக பரப்புரை மேற்கொண்டேன். இரு தொகுதிகளிலுமே பரப்புரை மேற்கொண்ட இடங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதைக் காண முடிந்தது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும், அதிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் அடங்கிய உறையை விநியோகித்துச் சென்றனர்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு 1500 ரூபாயும், திமுக சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இதே அளவில் பணம் விநியோகிக்கப்பட்டது.

அனைத்துத் தொகுதிகளிலும் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நேற்று பணம் வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு கட்சி வேட்பாளர்களும் அந்தத் தாள்களைத் தான் வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ரூ.1000, ரூ.500 ஆகிய தாள்களை மட்டுமே வழங்கினர்.

தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் சார்பில் 1500 ரூபாய்க்கு ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்களும் மீதமுள்ள தொகைக்கு ரூ.100 தாள்கள் ஐந்தும் வழங்கப்படுகின்றன. அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் களத்தில் எதிரணியினரைப் போல காட்டிக் கொண்டாலும், பணம் கொடுப்பதில் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை என எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதை ஆணையத்தால் தடுக்கமுடியவில்லை.

இந்திய வரலாற்றிலேயே ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்காக முதன்முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டவை என்ற அவப்பெயரை பெற்றவை இந்த தொகுதிகள்தான். பொதுத்தேர்தலின் போதே அளவுக்கு அதிகமாக பணம் வழங்கப்பட்டு, அதனைக் காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் பணம் பெரிய அளவில் விநியோகிக்கப்படலாம் என்பதால் அதற்கேற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வந்தது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில், ''தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வசதியாக பண விநியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் வானளாவிய அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. அதன்படி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுப்போம்'' என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையம் அதற்குரிய எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என்பதை தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளையும் வலம் வந்தாலே அறிந்து கொள்ள முடியும். 3 தொகுதி தேர்தல்களில் பணம் வெள்ளமாக பாயும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்துள்ள துணைத் தேர்தல் ஆணைய உமேஷ் சின்ஹா திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ''3 தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்தால், கடந்த முறை போன்று தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும்''என்று கூறியிருக்கிறார்.

இது துணைத் தேர்தல் ஆணையரின் அறியாமையையே காட்டுகிறது. 3 தொகுதிகளில் நடக்கும் பண விநியோகம் குறித்த தகவல்களை ஆணையத்தின் கவனத்திற்கு தேர்தல் அதிகாரிகளும், பார்வையாளர்களும் கொண்டு செல்லவில்லை என்பதையே இது உறுதி செய்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக வேட்பாளர் சரவணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 171 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் தொகுதி கீழவாசல் குறிச்சி தெருவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகி பாலசுப்பிரமணியத்திடமிருந்து 82,000 ரூபாயும், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகி சக்கரவர்த்தியிடமிருந்து 44,000 ரூபாயும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இரு திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பணம் விநியோகித்துக் கொண்டிருந்த மேலும் இரு திமுகவினர் தங்களிடமிருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோல், நாஞ்சிக்கோட்டை சாலையில் பண விநியோகத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகியான திருச்செல்வத்திடமிருந்து ரூ.2.90 லட்சமும், மருத்துவக் கல்லூரி அருகில் பண விநியோகத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி இளவரசனிடமிருந்து ரூ.50 ஆயிரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை தொகுதியில் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆய்வு மேற்கொண்ட நாளில் மொத்தம் ரூ.6.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற தொகுதிகளிலும் இதேபோல் பண விநியோகம் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வளவுக்குப் பிறகும் பணப்பட்டுவாடா குறித்து புகார் வரவில்லை என்று துணைத் தேர்தல் ஆணையர் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, அதிமுக மற்றும் திமுகவினரின் முறைகேடுகளுக்கு ஆணையம் துணை போகிறதா? என்ற ஐயம் எழுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் ரூ.50 கோடியும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தலா ரூ.40 கோடியும் குறைந்தபட்சமாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக யூகிக்க முடிகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 தொகுதிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினால் இதை உறுதி செய்து கொள்ள முடியும்.

அடுத்துவரும் 4 நாட்களில் இன்னும் கூடுதலாக பணம் விநியோகிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. வாக்காளர்களுக்கு இதுவரை விநியோகிக்கப்பட்ட ரூ.130 கோடியில் ரூ.120 கோடி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் ஆகும். இதன்மூலம் 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிகள் மட்டுமின்றி, கருப்புப்பணத் தடுப்பு சட்ட விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம். இவ்வளவுக்கும் பிறகு 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டால் அது ஜனநாயகப் படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்ததாகவே அமையும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்ப்பதாக அமையாது.

எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் 324 ஆவது தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x