

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வைக் கட்டாயமாக்கி, 2017-2018-ல் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் கொண்டுவந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அதில், மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளதால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புள்ளி விவரங்களுடன், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக 2010 முதல் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 2017, 2018-ம் ஆண்டுகளில் நீட் தேர்வைக் கட்டாயமாக்கி கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல. எனவே, அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கோரியிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தவழக்கை தள்ளிவைக்கக் கோரி,தமிழக அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், நீதிபதிகளிடம் கடிதம் அளித்தார்.
அதில், “ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக `மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021’ மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கை 12 வாரங்களுக்குத் தள்ளிவைக்கவேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதையடுத்து, இந்த வழக்கை 12 வாரங்களுக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.