Published : 15 Oct 2022 07:48 AM
Last Updated : 15 Oct 2022 07:48 AM

தற்கொலை செய்தவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் அல்ல: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்ததால் மனமுடைந்த நரிக்குறவர் சமூகத்தைச்சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. தனது சகோதரர் எனக்கூறி, பழங்குடியினரான இளவரசன் என்பவரது சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். அந்த இளவரசனுக்கும், வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அதில் தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதிகள், இறந்த வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா, இல்லையா என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி இரு வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x