

உலக மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த மாவீரன் காஸ்ட்ரோ மறைந்து விடவில்லை. உலகம் உள்ளளவும் அவரின் புகழ் ஓங்கி நிற்கும் என்று முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு தவித்த, கியூபா மக்களின் விடுதலைக்கு மகத்தான போர் நடத்தி வெற்றி கண்ட, மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90-ம் வயதில் தனது சிந்தனையையும், செயல்பாட்டையும் நிறுத்திக் கொண்டார்.
உலகின் மாபெரும் இலக்கியமான கம்யூனிஸ்ட் அறிக்கையை உலகிற்கு வழங்கிய மார்க்ஸ் ஏங்கல்ஸ் என்ற இரட்டை சகோதரர்கள் போன்று காஸ்ட்ரோவும் - சேகுவராவும் இரட்டை புரட்சியாளர்களாக இணைந்து பணியாற்றி கியூபாவின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட மகத்தான தலைவர்கள்.
கியூபாவில் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து காஸ்ட்ரோவின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி; ஆட்சி மேற்கொண்டதை அமெரிக்காவால் சகித்துக் கொள்ள இயலாமல், அந்நாட்டின் மீது போர் தொடுத்து தோல்வி கண்டது.
தனது நாட்டிலிருந்து 90 வது கி.மீ தூரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியா? அதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்ற இருமாப்போடு காஸ்ட்ரோவை படுகொலை செய்திட தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ மூலம் முயன்று, முயன்று தோற்றுப் போன அமெரிக்கா, கடைசி முயற்சியாக காஸ்ட்ரோ புகைக்கும் சுருட்டில் விஷம் வைத்துக் கொல்ல முயன்று தோற்றது.
கொலை முயற்சியில் தோற்றுப்போன அமெரிக்கா, சின்னஞ்சிறு தேசமான கியூபாவிற்கு பொருளாதார தடைவிதித்து அந்நாட்டிற்கு நெருக்கடி கொடுக்க முயன்று, அதிலும் தோற்றது.
ஃபிடல் காஸ்ட்ரோ சோஷலிசம் பாதையில் கியூபாவை வழிநடத்தி கியூபா மக்களுக்கு புது வாழ்வு அளித்தார், அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் அளித்து சாதனை படைத்தார். அனைத்து மக்களுக்கும் கல்வி அளித்ததுடன், வேலை வாய்ப்பையும் வழங்கி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை வழங்கி, ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை படைத்தார்.
அரைநூற்றாண்டு காலம் நாட்டின் தலைவராக இருந்து பணியாற்றி, தனது உடல் நிலை காரணமாக அதிபர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
உலக மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த மாவீரன் மறைந்து விடவில்லை. உலகம் உள்ளளவும் அவரின் புகழ் ஓங்கி நிற்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாவீரனுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு தமிழ்நாடு முழுவதும் மூன்று தினங்களுக்கு செங்கொடி தாழ்த்தி அரைக்கம்பத்தில் பறக்க விட்டு கட்சியின் கிளை அமைப்புகள் மறைந்த மாவீரனுக்கு வீரவணக்கத்தை செலுத்தும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.