சாய்தளப் பாதை, தீ தடுப்பு வசதிகள்: எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சாய்தளப் பாதை, தீ தடுப்பு வசதிகள்: எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாய்தளப் பாதை மற்றும் தீ தடுப்பு வசதிகள் உள்ளன என்பது குறித்து 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநரான ஜவஹர்லால் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘ தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் வசதிக்காக சாய்தளப் பாதைகள் மற்றும் தீ தடுப்பு சாதனங்கள் அமைக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

3 மாத அவகாசம்

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சாய்தளப் பாதைகள் மற்றும் தீ தடுப்பு பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தமிழக அரசு 3 மாதங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் சி.விஜயராஜ்குமார் தாக்கல் செய்த பதில் மனு வில், ‘‘தீயணைப்புத்துறை அறிக்கை யின்படி வடசென்னை மற்றும் தென்சென்னையில் 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் 24 தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

நோட்டீஸ்

அரசு மருத்துவ மனைகளுக்கு பணிமுடிப்பு சான்று அவசியம் கிடையாது. 24 தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில் ஆறு மருத்துவ மனைகள் மட்டுமே பணிமுடிப்பு சான்று பெற்றுள்ளன. பணி முடிப்பு சான்று பெறாத தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரர், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 சதவீத மருத்துவமனைகள் இன்னும் பணிமுடிப்பு சான்று பெறாமல் உள்ளது என குற்றம் சாட்டினார்.

6 வாரங்களில் அறிக்கை

அப்போது தலைமை நீதிபதி, ‘‘சென்னையில் மட்டு மல்ல, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மருத்துவ மனைகளின் நிலையும் அதுதான்’’ என வேதனை தெரிவித்தார்.

பி்ன்னர் நீதிபதிகள், தமிழகம் முழுவதும் எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் சாய்தளப் பாதை வசதி மற்றும் தீ தடுப்பு வசதிகள் உள்ளன என்பது குறித்தும், பணி முடிப்பு சான்றிதழ் பெற்றுள்ளது குறித்தும் தமிழக அரசு 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டு விசாரணையை வரும் ஜனவரி 20-க்கு தள்ளிவைத் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in