Published : 15 Oct 2022 06:04 AM
Last Updated : 15 Oct 2022 06:04 AM
திருப்பத்தூர்: 75 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு உடனடியாக பேருந்து வசதியும், தார்ச்சாலை வசதியையும் தமிழக அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புங்கம்பட்டு நாடு ஊராட்சியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உங்கள் குரல் மூலம் தனது புகாரை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும், அவர் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, புதூர்நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் மலை வாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, புங்கம்பட்டு நாடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவட்டானூர், கல்லாவூர், பெரும்பள்ளி, சேக்கானூர் ஆகிய 4 மலை கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இங்கு, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டு மென்றால் கரடு, முரடான மலைப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே பேருந்து வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி பெற வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல சின்னவட்டானூர், கல்லாவூர், பெரும்பள்ளி மற்றும் சேர்க்கானூர் ஆகிய 4 மலை கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் இங்கு வசித்து வரும் மலைவாழ் மக்கள் 5 கிலோ மீட்டர் தொலை வுள்ள கொடுமாம்பள்ளிக்கோ, 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள புதூர்நாடுஊராட்சிக்கோ அல்லது 7 கிலோ மீட்டர் தொலைவுள்ள கம்புகோடி என்ற மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பிற பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து வசதி இல்லாததால் எங்கள் கிராமப் பகுதிக்கு வாடகை ஜீப் மூலம் செல்ல முடியும். கீழே இருந்து மேலே வரவும், மேல் இருந்து கீழே செல்ல ஒரு நபருக்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். 4 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 4 கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வனத்துறை, தமிழக முதல்வர் தனிப்பிரிவு, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் என பலரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாராவது உடல் நிலை பாதித்தால் அவர்களை ‘டோலி’ கட்டித்தான் மலைப்பாதை வழியாக நகர் புறங்களுக்கு தூக்கி வருகிறோம். மலையில் இருந்து கீழே வர பல கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் டோலியில் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளின் நிலை மேலும் கவலைக்கிடமாக மாறி விடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில மலை பகுதிகளுக்கு போதிய சாலை வசதியும், பேருந்து வசதியும் இயக்கப்படாமல் இருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்து கிறது. எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதியும், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருதியும் புங்கம்பட்டு நாடு ஊராட் சிக்கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் நகர் பகுதிகளில் இருந்து புங்கம்பட்டு நாடு, புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய மலைப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந் துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சின்னவட்டானூர், கல்லாவூர், பெரும்பள்ளி, சேர்க்கனூர் ஆகிய 4 மலை கிராமங்களுக்கு போதிய பாதை வசதி இல்லாத காரணத் தால் அங்கு பேருந்துகளை இயக்குவது சாத்தியமற்றது. தார்ச்சாலை அமைக்கப்பட்டால் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT