

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா என கேள்வி எழுப்பினர்.
அப்போது, மத்திய அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி,"இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஏற்கெனவே இதுதொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது" என்றார்.
அதேபோல் நளினி மற்றும் ரவிசந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் வழக்கறிஞர் ஆனந்தசெல்வம், "இந்த விவகாரத்தில் தற்போதைக்கு மத்திய அரசின் தலையீடு தேவையில்லை" எனத் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும். விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினால் ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான உத்தரவுகளை மேற்கோள் காட்டி, நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.