வேலைவாய்ப்பற்றோர், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியோருக்கு குறுகிய கால பயிற்சி

வேலைவாய்ப்பற்றோர், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியோருக்கு குறுகிய கால பயிற்சி
Updated on
1 min read

வேலைவாய்ப்பற்ற இளைஞர், மகளிர், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தால் குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பார் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய(ஐடிஐ) மேலாண்மைக் குழுவுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிருக்கும், உயர்கல்வியைத் தொடர முடியாமல், பள்ளிக்கல்வியை இடையில் நிறுத்திய மாணவ, மாணவியருக்கும் குறுகிய காலப் பயிற்சிகள் கிண்டி ஐடிஐயில் அளிக்கப்படுகிறது.

எலெக்ட்ரீஷியன் (டொமஸ்டிக்), அடிப்படை பொருத்துதல் மற்றும் அளவீடு, விண்டோ மற்றும் ஸ்பிலிட் ஏசி பழுதுபார்த்தல், நான்கு சக்கர வாகனம் பழுதுபார்த்தல், வெல்டர், சமையல் கலை, உணவு மற்றும் குளிர்பானங்கள் சேவை ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி இந்த மாதம் முதல் தொடங்குகிறது. 5-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த, 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். மூன்று மாத பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சிக்கு வந்து செல்ல ரூ.100 வீதம் பயிற்சி நாட்களில் மடடும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் தமிழக அரசு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கலாம்.

மேலும் விவரங்களுக்கு கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அல்லது 044 22501530, 22501538, 94451 67506, 94440 18785, 98407 37173 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in