

சென்னை: காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று 11 டெல்டா மாவட்டங்களுக்கும் நீர்வளத் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
55 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்து வந்தது. இன்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன என அணையில் இருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாருர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 டெல்டா மாவட்ட நிர்வாகத்துக்கும், நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வருவாய் துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, நீர் வளத்துறை அதிகாரிகள் இணைந்து காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரும் அளவை வெள்ளக் கட்டப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து, நீர் வரத்துக்கு ஏற்பட 16 கண் மதகு ஷெட்டரை திறந்து விட பணியாளர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நிறுத்தம்: சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கு இடையே காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்காக கதவணை கட்டப்பட்டுள்ளது. இதனால், பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த பகுதியில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. படகு போக்குவரத்தை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.