Published : 14 Oct 2022 04:35 PM
Last Updated : 14 Oct 2022 04:35 PM

வாரிசு சான்றிதழ் விவகாரம்: தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மனு தள்ளுபடி 

சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2016-ம் ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எம்.ஏ.எம். ராமசாமியின் தந்தையும் எனது தந்தையும் சகோதரர்கள். நாங்கள் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எம்.ஏ.எம். ராமசாமி கடந்த 1996-ம் ஆண்டு ஐயப்பன் என்பவரை தத்து எடுத்துக்கொண்டார். இது நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது. எதிர்ப்புகளை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டுள்ளார்.

சட்டவிதிகளுக்கு மாறாக தத்து எடுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்துகொண்டு, ஐயப்பன் தனது பதவியை துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம் ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்துகொண்டார். மேலும் எம்.ஏ.எம்.ராமசாமி தனது உயிலை பதிவு செய்யும்போது தனது அசையும் அசையா சொத்துகளை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்ததால், அவரை ஐயப்பன் முறையாக நடத்தவில்லை.

எம்.ஏ.எம் ராமசாமி வாழ்ந்த காலத்தில் அவருக்கு துரோகம் செய்த ஐயப்பன், மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு நானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களது எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும்" என்று கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக கூறினாலும் அதற்கான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே பின்னரே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தது. அப்போது, மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், "வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏ.சி.முத்தையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x