

சென்னை: சென்னையில் உள்ள ராஜாஜி ஹால் மற்றும் கிண்டி கிங் மையத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இதன்படி கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள 17 கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன்படி இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.
இதன்படி ரூ.17 கோடி மதிப்பீட்டில் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால், ரூ23.08 கோடி மதிப்பில் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பழைய சம்பள கணக்கு (கிழக்கு ) அலுவலகம், ரூ.2.20 மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாமில் உள்ள கலோனியல் மாளிகை, ரூ1.80 கோடி மதிப்பீட்டில் தேனி, பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட முன்சிப் நீதிமன்ற கட்டிடம் என்று மொத்தம் 17 கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்ய மொத்தம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான டெண்டரை தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. இது இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.