

சென்னை: வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறுவனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடும்பத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட நினைப்பவர்கள், விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டால் உடனடியாக வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசையைத் தூண்டுகின்றனர்.
இதை உண்மை என நம்பும் பலர் கையில் இருக்கும் பணத்தை எந்தவித விசாரிப்பும் இல்லாமல் அப்படியே கொடுத்து விடுகின்றனர். இதில், சில நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகின்றனர்.
சுற்றுலா விசா: இதனால், பாதிக்கப்படுபவர்கள் நிலைகுலைந்து விடுகின்றனர். மேலும், சிலரை சுற்றுலா விசாவில் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு நழுவி விடுகின்றனர். அண்மையில் கூட தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் சம்பந்தப்பட்ட முகவரிடம் ரூ.2.5 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் அந்த முகவர்கள் பணம் செலுத்திய நபர்களை சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காக்கிற்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து சட்ட விரோதமாக மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு இவர்களை மிரட்டி சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
இதேபோல கம்போடியா நாட்டில் உள்ள ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி வேலை வாய்ப்பு உள்ளதாகக் கூறி முகவர்கள் மூலம் ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களை கம்போடியா நாட்டுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
வெளிநாட்டில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் தமிழக இளைஞர்களின் வீடியோ காட்சிகள் மற்றும் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு காவல் துறை, இந்தியத் தூதரக உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர். குறிப்பாக கம்போடியா நாட்டிலிருந்து 13 பேரும், தாய்லாந்து நாட்டிலிருந்து 29 பேரும் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
திருச்சியில் 2 பேர் கைது: வெளிநாட்டில் சிக்கித் தவித்த இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மோசடிக்கு உதவியாக இருந்ததாக திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்களான ஹானவாஸ், முபாரக் அலி ஆகியோரை தமிழக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே, வெளிநாட்டு மோகத்தில் மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட முகவர்: இதுகுறித்து அவர் கூறுகையில்,“வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அறியாமல் சுற்றுலா பயண விசாவில் 6 மாத வேலை செய்ய எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். இதுபோன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழக காவல் துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவை (NRI Cell) nricelltn.dgp@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044 28447701 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வெளிநாட்டுக்கு வேலை செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். சம்பந்தப்பட்டவர் பதிவு செய்த முகவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் காவல் துறையை அணுகலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப்படும்” என்றார்.
மேலும், அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லும் நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறோம் என இளைஞர்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி செயலிகள், மோசடி லோன் ஆப், க்ரிப்டோ கரன்சி மோசடி ஆகிய வேலைகளில் ஈடுபடுத்துவார்கள். உங்கள் செல்போன் எண், இ-மெயில் ஐடியை பயன்படுத்தி உங்களை குற்றங்களைச் செய்ய வைத்து நீங்கள் திரும்பி வர முடியாதபடி செய்து வருகிறார்கள். உங்கள் திறமையை மீறிய அளவு சம்பளத்தோடு வெளிநாடுகளில் வேலை தருவதாகச் சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
காவல் துறையில் தனிப்பிரிவு: தமிழக காவல் துறையில் அண்மையில் உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பிரிவின் எஸ்பி சண்முகப்பிரியா கூறும்போது, “வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் அவர்களை அழைத்துச் செல்லும் நிறுவனம் அல்லது முகவர்கள் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் 044 28470025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப்படும். வெளிநாட்டு வேலை தொடர்பாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 40 புகார்கள் வந்துள்ளன. எங்களுக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. இருப்பினும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட காவல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கத் தேவையான உதவி செய்வோம்” என்றார்.