

சென்னை: மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 510 சேமிப்பு கிடங்குகள் மூலம் 3.75 லட்சம் டன் விளைபொருட்களைச் சேமிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது:
விளைபொருட்களைச் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 510 கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 3.75 லட்சம் டன் விளைபொருட்களைச் சேமித்து வைக்கலாம். செப்டம்பர் வரை 14.16 லட்சம் டன் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பொருளீட்டுக் கடனாக ரூ.13.45 கோடியும், வணிகர்களுக்கு ரூ.2.65 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 3942 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 1140 பேருக்கு ரூ.30.03 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.