

மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனி நபர்கள் கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெற்று மோசடி செய்து வருகின்றனர் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுதரப்பில், கோயில் பெயர்களில் தனி நபர்கள் இயக்கி வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் பெயர்களில் இணையதளம் நடத்தி தனி நபர்கள் பணம் வசூலிப்பதைமுழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் கோயிலாகவே இருக்க வேண்டும். கோயில் வழிபாட்டுக்கான இடம்தான். வியாபாரத்துக்கான இடம் அல்ல. கோயில் மக்களுக்கானது. சிலருக்கானது அல்ல. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ஏடிஜிபி (சைபர் கிரைம்) ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள். விசாரணை அக்.26-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.