

மதுரை: எனது விருந்து நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று நிர்வாகிகளை தடுக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார். திமுக தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக மதுரை மாநகர கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மடீட்சியா அரங்கில் நேற்று மதியம் சைவ மற்றும் அசைவ விருந்து வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மிசா பாண்டியன், மண்டலத் தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த விருந்தில் மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
நிகழ்ச்சியில் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: ஸ்டாலின் சம்மதம் பெற்றுத்தான் இந்த விருந்து வைத்துள்ளேன். சிலர் தானும் இந்த விருந்தை புறக்கணித்துவிட்டு அடுத்தவர்களையும் புறக்கணிக்கும் வகையில் மிரட்டுகிறார்கள். நான் உலக அளவில் பல முக்கிய பொறுப்புகளில் அனுபவம் பெற்றவன். அதனால் யாருக்கும் நான் ஜால்ரா அடிக்க மாட்டேன். எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதை பின்பற்றுவேன். யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்னால் பயன் அடைந்தவர்கள், செய்நன்றி மறந்தவர்கள் மதுரையில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்படும். இதுவரை எந்த அரசும் செய்யாத விஷயங்களை நிதித் துறையில் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான வாய்ப்பைக் தந்ததலைவருக்கு செய்நன்றி செய்யாவிட்டால் நன்றி கெட்டவனாகிவிடுவேன். அதற்காகவே இந்த விருந்து வைத்துள்ளேன்.
அரசியல், பொதுவாழ்வை விட்டு நான் போகும் வரை, என்றைக்கும் அவரைப் போய் பார்க்காதே, அந்த நிகழ்சிக்குப் போகாதே, அவர் பெயரைப் போடாதே என்று சொல்ல மாட்டேன். எனக்காக போஸ்டர் ஒட்டுங்கள், என் படத்தைப்போடுங்கள் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் பெரிய மனிதன். இவ்வாறு அவர் பேசினார். தளபதி அணியினர் அமைச்சரின் விருந்தைப் புறக்கணித்த நிலையில் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது மதுரை மாநகர திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.