

சென்னையில் நகைக் கடைகள், ஏஜென்ட்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்க நகைகளை வாங்கிக் குவித்தவர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த பலரும் நகைக் கடைகளுக்கு சென்று தங்கக் கட்டிகளையும், நகைகளையும் வாங்கிக் குவித்தனர். சென்னை உட்பட பல நகரங்களில் அன்று விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் நடந்தது.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி, மும்பை, சண்டீகர், லூதியானா, ஜலந்தர் உட்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகள், ஏஜென்ட்களின் வீடுகள் உட்பட 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில்வராத சுமார் ரூ.25 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்கள் சோதனை நடத்திய நகைக் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு குறிப்பிட்ட தினத்தில் நகை வாங்கியோரின் விவரங்களை சேகரித்துள்ளனர்.
அதை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு நகை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது, உடனடியாக தங்கம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதால் அவர்கள் சிக்கலில் செய்வதறியாது உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கலால் துறை புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து ஒருசில நகைக் கடைகளில் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.