

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான கல்வித் தகுதி விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
கல்லூரி நிர்வாகங்களும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியில் அனுதாபம் காட்டக்கூடாது. அது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவேபச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும். கல்லூரிகல்வி இயக்குநர், இந்த கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதியைச்சரிபார்த்து, அந்த நியமனங்கள் முறையாக நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நவ.14-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.