

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 250 பேர் அதிமுகவில் இணைந்தனர். ஒற்றை தலைமை சர்ச்சை காரணமாக அதிமுகவில் இருஅணிகள் செயல்பட்டு வருகின்றன.இதை திமுக தங்களுக்கு சாகமாகவே பார்த்து வருகிறது. இந்நிலையில் திமுகவினர் அதிமுகவில் நேற்று இணைந்திருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் நீலாங்கரை ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணிஅமைப்பாளர் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர். ஸ்ரீகாந்த், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி இலக்கிய அணி அமைப்பாளர் பி.சரவணன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜி. அசோக்குமார், 182-வதுவட்ட திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் வி.ஆர். ஸ்ரீராம்உள்ளிட்ட 250 பேர் பழனிசாமியைநேரில் சந்தித்து, தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அப்போது, கட்சி மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, சென்னை புறநகர்மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆளுங்கட்சியாக உள்ள திமுகவில் இருந்து 250 பேர் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.