

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை தொடரும் நிலையில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் போட்டிகளுக்கு காளைகளை காளைவளர்ப்போர் தயார்செய்து வருகின்றனர்.
தமிழர்களின் வீரத்தை அடையாளப்படுத்தும் ஜல்லிக் கட்டு விளையாட்டு, தென் மாவட்டங்களில் பிரபலம். தமிழக அளவில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூர், சேலம் தம்மம்பட்டி, அரியலூர் கோக்குடி போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டுக்கு பிரசித்திப் பெற்றவை. அதுவும், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்திப் பெற்றவை. பொங்கலுக்கு மறுநாள் அலங்கா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள், திரளு வார்கள். பொங்கலுக்கு முந்தைய நாள் அவனியாபுரத்திலும், பொங்கல் அன்று பாலமேட்டிலும், பொங்கலுக்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் கோலாலகமாக நடக்கும். சுற்றுவட்டார கிராம ங்கள் திருவிழா கோலத்தில் களைக்கட்டும்.
அலங்காநல்லூர், அவனியா புரம், பாலமேடு ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்காகவே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வலசை, குரவன்குளம், ஒத்தை வீடு, புதுப்பெட்டி, கல்லணை, கோட்டை மேடு, குமாரா, தண்டலை, ரங்கராஜபுரம், பொதும்பு, குலமங்கலம், எலும்பூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட 30 கிராமங்களில் காளை வளர்போர், பிரத்தியேகமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பார்கள். விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டாக ஜல்லிக்கட்டு காளைகளை, போட்டிக்காக தயார்படுத்துவதும், கடைசி நேரத்தில் போட்டிக்கு அனுமதி கிடைக்காமல் காளைகளை களத்தில் இறக்கிவிட முடியாமல் காளை வளர்ப்போரும், அவற்றை அடக்க முடியாமல் காளையர்களும் ஏமாற்றமடைவது தொடர்கிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை தற்போது நெருங்கும்நிலையில் சில வாரம் முன், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதனால், வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடப்பது தற்போது வரை உறுதியாகவில்லை. ஒரு புறம் தென் மாவட்ட ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் தொடர்ந்தாலும், மற்றொரு புறம் இந்த ஆண்டு ஆட்சியாளர்களையும், அரசியல் கட்சியினரையும் நம்பாமல் காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் சேர்ந்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதனால், ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் உறுதியாகாவிட்டாலும் காளை வளர்ப்போர் ஜல்லிக்கட்டு காளை களை போட்டிக்கு தயார்படுத்தி வருகின்றனர். காளைகளுக்கு முட்டை, நல்லெண்ணை, பருத்தி, புண்ணாக்கு என ஊட்டமுள்ள உணவுகளை வழங்கியும், நடைப்பயிற்சி, நீச்சல்பயிற்சி, மணலைமுட்டும்பயிற்சி, பாய்ச்சல் காட்டுதல், பொம்மைகளை குத்தும் பயிற்சியளித்தும் வருகின்றனர்.
அந்த காலத்தில் பயிற்சியெல்லாம் இல்ல..!
இதுகுறித்து அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ், கூறுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த சிக்கலும், சர்ச்சையும் இல்லாத காலத்தில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் 10, 20 காளைகள் வளர்த்தனர். தற்போது ஆயிரம் மாடுகளுக்கு குறைவாகவே வளர்க்கின்றனர். அந்த காலத்தில் காளைகளுக்கு ஜல்லிக்கட்டுக்கென்று தனிப்பயிற்சியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். இந்த கன்று, ஜல்லிக்கட்டுக்கு பாயும், சரிப்பட்டு வருமென்று, தேர்ந்தெடுத்து வளர்ப்போம். அந்த கன்றுக்கு முதல் ஒரு ஆண்டு, பால் நிறைய கொடுத்து, கிட மாடுபோல் வளர்ப்போம். எந்த வேலையும் கொடுக்காமல் நல்லா தீனிபோட்டு வளர்ப்பதால் இயற்கையாகவே அந்த மாடு திமிறாகவே வளரும். கட்டவிழ்த்துவிட்டால் எதிர் படுவோரை குத்த பாயும்.
காளைகளுக்கு திமிரு ஏற, ஏற இயற்கையாகவே அதுவா மண்ணை குத்தும். சமீப காலமாக ஜல்லிக்கட்டு மவுசு கூடிபோனதாலே, இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இந்த பயிற்சி, அந்தப் பயிற்சி எனக் கொடுக்க ஆரம்பித்தனர். அது காளைகளுக்கு புத்துணர்வு கொடுத்ததால் அதுவே தொடர்கிறது. ஜல்லிக்கட்டு நடந்தாலும், நடக்காவிட்டாலும் எங்களை போல் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காதவர்கள் காளைகளை வளர்க்கத்தான் செய்வோம் என்றார்.