Published : 14 Oct 2022 06:18 AM
Last Updated : 14 Oct 2022 06:18 AM

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் காணாமல் போன இளைஞர் மும்பையில் மீட்பு: ஆதார் ‘ஓடிபி’ வைத்து கண்டுபிடித்த போலீஸார்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடியைச் சேர்ந்தவர் அறிவழகன். பிளஸ் 2 படித்து வந்த இவரது மகன் மாதேஷ்(16), 2021, பிப்ரவரியில் புத்தாடை எடுப்பதாகக் கூறி வீட்டில் ரூ.5,000 வாங்கிக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் மாதேஷை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், தனது மொபைல் எண்ணுக்கு ஆதார் தொடர்பாக வந்த ஓடிபி எண் குறித்து போலீஸாரிடம் அறிவழகன் தெரிவித்தார். அதை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்ததில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக மும்பையில் மாதேஷ் விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, தலைமைக் காவலர் ஜானி ரஞ்சித் ஆகியோர் அறிவழகனுடன் மும்பை சென்றனர். அங்கு, மாதேஷை கண்டுபிடித்தனர். அங்கு மகனைக் கண்டதும் அறிவழகன் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். போலீஸார் விசாரணையில், மாதேஷ் திருவாரூரில் இருந்து பெங்களூரு சென்று, பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். மும்பையில் தொழிலதிபராக உள்ள சேலத்தைச் சேர்ந்த கனகவேலிடம் வேலைக்குச் சேர்ந்த மாதேஷ், தனக்கு தாய்- தந்தை இல்லை என்று அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாதேஷை தனது மகனைபோல கனகவேல் பராமரித்து வந்துள்ளார். இந்தநிலையில்தான், அங்கு ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காக பதிவு செய்தபோது வந்த ஓடிபி மூலம் காவல் துறையினர் மாதேஷின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x