உள்ளாட்சி நிர்வாகத்தை எளிமைப்படுத்த அலைபேசி செயலி: வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் அறிமுகம்

உள்ளாட்சி நிர்வாகத்தை எளிமைப்படுத்த அலைபேசி செயலி: வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் அறிமுகம்
Updated on
2 min read

நிர்வாகத்தை எளிமைப்படுத்த வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளுக்கு அலைபேசி ‘செயலி’யை அறிமுகப்படுத்தியுள்ளது வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாரியத்தில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், அவர்களின் அடிப்படை வசதிகளை வாரிய நிர்வாகமே பூர்த்தி செய்து வருகிறது.

வாரியத்துக்கு உட்பட்ட 7 வார்டுகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2004-ம் ஆண்டில் எழில்மிகு வெலிங்டன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மட்கும் குப்பை, மட்காத குப்பை பிரிப்பது; காய்ச்சிய நீரை பருகுவது; கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது; பொது இடங்களை அசுத்தம் செய்வதை தவிர்ப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகள் வாரியம் முழுவதும் இடம் பெற்றுள்ளன.

வாரிய துணைத்தலைவர் எம்.பாரதியார் கூறும் போது, ‘வாரியப் பகுதி பிளாஸ்டிக் மற்றும் குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

தற்போது, தொடங்கப்பட்டுள்ள, ‘தூய்மையான இந்தியாவை நோக்கி’ என்ற சிறப்புத் திட்டத்தை மக்கள் ஆர்வத்துடன் முன்வந்து செயல்படுத்தினால், திட்டம் முழுமைபெறும். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நீரோடைகளை சுத்தம் செய்தல், முட்புதர்களை நீக்குதல் போன்றவையும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். வெலிங்டனில் குப்பைக் கிடங்குகளை சுத்தமாக மாற்றி மருத்துவ மூலிகைகள் கொண்ட பூங்காவாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

மக்கள் வாரியத்தை எளிதாக தொடர்பு கொள்ளவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய அலைபேசி ‘செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாரிய நிர்வாக அதிகாரி ஹரீஸ்வர்மா கூறும்போது, ‘வரி வசூல், புகாரை தெரிவிப்பது எனில், இதுவரை எழுத்து பூர்வமாகவும், ‘ஆன்லைன்’ மூலமாகவும் பெறப்பட்டு வந்தது.

வாரிய நிர்வாகத்துக்கு என தனியாக தொடங்கப்பட்டுள்ள இந்த செயலியை வாரியத்துக்கு உட்பட்ட மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், சொத்து வரி, குடிநீர் வரி குறித்து தகவல்கள் அறிந்து கொண்டு, பணத்தை செலுத்தலாம்.

சொத்து பெயர் மாற்றம், பிறப்பு இறப்பு பதிவுகள் செய்து கொள்வதுடன், தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்த புகார்களை புகைப்படங்களுடன் இதில் அனுப்பலாம்.

இந்த புகார் மீதான நடவடிக்கை வாரிய நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும். இதனை மொபைலில் ‘கூகுல்பிளே’ ஸ்டோரில் சென்று, ‘CANTONMENT BOARD WELLINGTON’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in