

பெரவள்ளூரில் வருவாய் ஆய் வாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் சிக்கியுள்ளனர்.
சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி சத்தியவாணி முத்து தெருவை சேர்ந்தவர் மணி மாறன்(53). இவர் மந்தைவெளி குடிசை மாற்று வாரியத்தில் வருவாய் ஆய்வாளராக பணி புரிந்தார்.
கடந்த 27-ம் தேதி வீட்டை விட்டு சென்ற மணிமாறன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 29-ம் தேதி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி அன்னசெல்வி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓட்டேரி காவல் நிலைய எல்லைப்பகுதியில் புதரில் அடை யாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது காணாமல்போன மணிமாறன் என்பது தெரிந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் ராயபுரத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து மணிமாறனை கடத்தி கொலை செய்தது தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக பெரவள்ளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மகேஷ், சூர்யபிரகாஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 4 பேர் நேற்று சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.