Published : 10 Nov 2016 09:45 AM
Last Updated : 10 Nov 2016 09:45 AM

திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தில் தொடர் மரணத்தால் பீதியில் தவிக்கும் மக்கள்

திருவண்ணாமலையில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள தண்டரை கிராமத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை 25 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அடுத்தது யார் என்ற பீதியுடன் வாழ்ந்து வருகிற அக்கிராமத்தி னரிடம் பேசியபோது பயத்தின் பிடியில் இருந்து அவர்கள் விலகாதது புரிந்தது. அந்தோணி ராஜ் என்பவரின் மகன் கிறிஸ் டோபர்(14), கடந்த அக். 7-ல் உயிரிழந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனை வரை சென்று போராடியும் பலனில்லாத நிலை யில், இது தற்செயலாக நடந்தது என்றே பெற்றோர் நினைத்தனர்.

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து வந்த ஆரோக்கியதாஸின் மகன் நெல்சன்(9) அக். 13-ல் (கிறிஸ்டோபரின் சித்தப்பா மகன்) உயிரிழந்தார். அப்போதுதான், கிறிஸ்டோபரை போலவே நெல்சனும் வயிறு வலிக்கிறது என்று கூறி வாந்தி எடுத்தது பெற்றோருக்கு நினைவுக்கு வந்தது.

கிறிஸ்டோபரின் 16-ம் நாள் சடங்குக்கு சித்தூரில் இருந்து வந்த கிறிஸ்டோபரின் தாய் மாமன் அந்தோணி விமல்ராஜின் மகள் மெர்லின்(7) அக். 23-ல் உயிரிழந்தார். இதற்கிடையில், ஜான்பீட்டர் மகன் வினோத் குமார்(22) அக். 9-லும் அவரது தாத்தா ஜோசப்(83) என்பவர் அக்.25-லும் உயிரிழந்தனர். இவர்களும் கிறிஸ்டோபரின் உறவுகள்தான். அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்த சூழ்நிலையில், திடகாத்திரமாக இருந்த கிறிஸ்டோபரின் பாட்டி கிறிஸ்தா(65) உடல்நலம் பாதிக்கப்பட்டு அக்டோபர் 31-ம் தேதி உயிரிழந்தார். இவர்கள் அனைவரும் வாந்தி எடுத்து, வயிறு வலிக்கிறது என்று கூறிய நிலையில் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கிறிஸ்டோபரின் பாட்டி கிறிஸ்தாவின் உடலில் நச்சுப் பொருள் கலந்துள்ள தகவல் வெளியானதும், காவல்துறை அதிகாரிகள் கிறிஸ்தாவின் வாரிசுகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளனர்.

சோகத்தில் இருந்து மீளவில்லை

உயிரிழந்த கிறிஸ்தாவின் மகன் நீலன்ஸ் கூறும்போது, ‘‘எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. என் தாயின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்ததாகக் கூறும் போலீஸ் அதிகாரிகள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சந்தேகப்படுகின்றனர். அதுதான் வேதனை அளிக்கிறது’’என்றார்.

ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை ஆட்சியர் பிரசாந்த் நேற்று கூறும்போது, ‘தண்டரையில் உயிரிழந்த 8 பேரில் 2 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். மற்ற 6 பேரும் ரத்த உறவுகள். கடைசியாக உயிரிழந்த கிறிஸ்தாவின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. வேலூர் மண்டல தடயவியல் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப் பட்ட கிறிஸ்தாவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரியில் மஞ்சள் பாஸ்பரஸ் விஷம் கலந்து பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உணவில் விஷம் கலந்துள்ளது என்று கூற முடியாது. மற்ற 5 பேர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியாது.

இதுகுறித்த விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பான விவரங்கள், காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. தொற்று நோயால் யாரும் இறக்கவில்லை. மூட நம்பிக்கையுடன் இருக்க வேண் டாம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். படிப்பு மிக முக்கியம். அவர்களது கல்வி பாதிக்கக் கூடாது” என்றார்.

எலி மருந்து

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ஜெயந்தி கூறும்போது, ‘எலிகளைக் கொல் வதற்கு பயன்படுத்தப்படும் மருந்து, கிறிஸ்தாவின் உடலில் கலந்துள்ளது. உட்கொள்ளப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து பாதிப்பு தெரியவரும். அதனை உட்கொண்ட 24 மணி நேரம் முதல் 40 மணி நேரத்தில், வாந்தி மற்றும் வயிற்று வலிதான் முதலில் ஏற்படும். அதுதான் அறிகுறி. பின்னர் கல்லீரல், சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதன்பிறகு, இதயத்தைப் பாதிக்கும். அப்போதுதான் மரணம் ஏற்படும். அவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

விசாரணைத் தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி கூறும்போது, ‘தண்டரை கிராமத்தில் உயிரிழந்த கிறிஸ்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை முழு மையாக படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது ஆரம்பக் கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளோம். டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை’ என்றார்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன் கூறும்போது, ‘‘தண்டரை கிராமத்தில் நிகழ்ந்த தொடர் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மேலும் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x