Published : 13 Oct 2022 06:15 PM
Last Updated : 13 Oct 2022 06:15 PM

“இந்த நிகழ்வுக்கு வராதீர்கள் என்று தடுக்கிறார்கள்” - மதுரை திமுகவினருக்கு விருந்து வைத்த பழனிவேல் தியாகராஜன் புலம்பல்

மதுரை: ''என் விருந்து நிகழ்ச்சிக்கு வராதீர்கள் என்று நிர்வாகிகளை தடுக்கிறார்கள்'' என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கவலை தெரிவித்தார்.

திமுக தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக மதுரை மாநகர கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இன்று மதியம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 'மடீட்சியா' அரங்கில் விருந்து வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் கலந்துகொண்டு நிர்வாகிகள், தொண்டர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மேயர் இந்திராணி, மிசா பாண்டியன், மண்டலத்தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது: ''திமுக தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான நிகழ்வுக்காக இந்த விருந்து வைக்கப்பட்டுள்ளது. தனியாக சிலருக்கு மட்டும் ஏற்பாடு செய்தால் பொருத்தமாக இருக்காது என்பதால் எல்லோரையும் அழைத்து வைத்துள்ளேன். இந்த விருந்திற்கு தலைவர் ஸ்டாலினிடம் சம்மதம் பெற்றுதான் வைத்துள்ளேன்.

ஆனால், சில நாட்களாக மதுரையில் வரும் தகவல்கள் எனக்கு மன வேதனை அளிக்கிறது. சிலர் தானும் இந்த விருந்தை புறக்கணித்துவிட்டு, அடுத்தவர்களையும் புறக்கணிக்கும் வகையில் மிரட்டுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகதான் பொதுக்குழுவில் தலைவர் ஸ்டாலின், தலைமை பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பிறப்பினால், வாய்ப்பினால், கல்வினால், அனுபவத்தினால், உழைப்பினால், திறமையினால் நான் உலக அளவில் பல முக்கியமான பொறுப்புகளில் அனுபவம் பெற்றவன். அதனால், யாருக்கும் நான் சும்மா ஜால்ரா அடிக்க மாட்டேன். பல தலைமுறையாக என் குடும்பம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பம். இது எங்க தாத்தா காலத்தில் இருந்து ஆரம்பித்த கலாசாரம். அதனால் கல்வியின், ஞானத்தின் அடிப்படையில் எது எனக்கு உண்மை என்று தெரிகிறேதோ அதை பின்பற்றுவேன். அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன். தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார், யார் சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் கேள்வி கேளு. உனக்கு எது சரியாக தோனுகிறதா அதை செய் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படை சுயமரியாதை. என்றைக்குமே கல்வி, ஆய்வு, படிப்பு அனுபவம் அடிப்படையில் சுய மரியாதையை நான் இழக்கவே மாட்டேன்.

எங்களுக்கும், அடுத்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். சில சமயங்களில் அதை மீறி செயல்படுவதற்கு ஏற்றுக் கொள்வேன். அதற்கு சமூக நீதிக்காக, செய்நன்றி ஆகிய இரண்டு காரணங்கள் உண்டு. என் வாழ்க்கயைில் எத்தனையோ பேர் செய்நன்றி மறந்தவர்கள் இருக்கிறார். என்னால் பயன்பட்டவர்கள், செய்நன்றி மறந்தவர்கள் மதுரையில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்படும். அது இயற்கையே கொடுத்துவிடும். ஆனால், நான் என்றைக்கும் செய் நன்றி மறக்க மாட்டேன். செய்நன்றி மறக்காமல் இருப்பதே மனிதர்களுக்கு உள்ள நல்ல குணம்.

நான் தலைவர் ஸ்டாலினிடம், உங்க தலைமையில் நானும், நீங்களும் வரலாற்றை எழுதுகிறோம் என்றேன். இதுவரை எந்த அரசும் செய்யாத விஷயங்களை நிதி துறையில் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான வாய்ப்பை கொடுத்த தலைவருக்கு செய்நன்றி செய்யாவிட்டால் நன்றி கெட்டவனாகிவிடுவேன். அதற்காகவே இந்த விருந்து வைத்துள்ளேன்.

பெரிய மனிதர்களாக இருக்க வேண்டியவர்களுக்கு மனிதநேயம், நட்பு பெருந்தன்மை இருக்க வேண்டும். எல்லோரும் அப்படி இருக்க முடியாது. ஆனால், என்றைக்குமே குட்டி மனிதர்களாக ஆகாதீர்கள். அரசியல், பொதுவாழ்வை விட்டு நான் போகும் வரை, என்றைக்கும் அவரை போய் பார்க்காதே, அந்த நிகழ்சிக்கு போகாதே, அவர் பெயர் பெயரை போடாது என்று சொல்ல மாட்டேன். அதேபோல் நான் விமான நிலையத்திற்கு வந்தால் என்னை வரவேற்க வாருங்கள், எனக்காக போஸ்டர் ஓட்டுங்கள், என் படத்தைப் போடுங்கள் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் பெரிய மனிதன். எனக்கு தேவையில்லை” என்று அவர் பேசினார்.

அமைச்சர் பொறுப்பே வேண்டாம் என்றவன்: மேலும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''என் தந்தை மறைந்தபோது என்னை அழைத்து தலைவர் கருணாநிதி என்னிடம் வந்து இருக்க வேண்டும் என்றார். பல்வறு காரணங்களுக்காக அவரது அழைப்பை ஏற்க முடியவில்லை. அன்றைக்கே நான் சேர்ந்திருந்தால் அமைச்சர் வாய்ப்பு வந்திருக்கும். அமைச்சர் பொறுப்பை வேண்டாம் என்றவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். எனக்கு இரண்டு பேர் தெரியும். எனது தந்தையை எம்ஜிஆர் அழைத்து என்னிடம் வந்துவிடுங்கள், அமைச்சர் பொறுப்பு தருகிறேன் என்றார். ஆனால், அவரோ வாழ்நாள் முழுவதும் இதே கட்சியில்தான் இருப்பேன் என்று மறுத்துவிட்டார். இன்னொரு நபர், என் தாத்தா. அந்த பரம்பரையில் வந்தவன் நான். நான் யாரிடமும் போட்டியிடுகிற ஆள் இல்லை. நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு போதும். இதற்கு மேல் நான் கீழ் இடத்திற்கு இறங்க முடியாது. நான் பெரிய மனிதராக இருக்க ஆசைப்படுகிறேன். நான் பொருளாதாரம் வைத்துள்ளேன். அடுத்தவரிடம் கைநீட்ட தேவையில்லை. சிலருக்கு நிறைய பொருள் இருந்தாலும் இன்னும் பேராசை உள்ளது'' என்றார்.

திமுக மாநகர மாவட்டச் செயலாளர் தேர்தலின்போது மாவட்டச் செயலாளரான தளபதி ஒரு அணியாகவும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழினிவேல் தியாகராஜன் ஆதரவுடன் அதலை செந்தில் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இந்தச் சூழலில் தளபதி அணியின் இந்த விருந்தை புறக்கணித்த நிலையில், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இப்படி பேசியிருப்பது மதுரை மாநகர திமுகவின் கோஷ் டிபூசல் பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x