இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஆ.ராஜா | கோப்புப்படம்
ஆ.ராஜா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது புகாரின் பேரில் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in