நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்: தமிழக அரசு பதில் மனு

நளினி | கோப்புப்படம்
நளினி | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது; பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்ப்டடுள்ளது. அதில், "இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும். குறிப்பாக, ஆளுநர் தனது தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் எடுக்கும் முடிவில் ஒருசில காரணத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அரசியல்சாசன பிரிவு 161-ஐ பயன்படுத்தி ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்பதை ஆந்திராவின் "இப்ரூ சுதாகர்" என்பவரது வழக்கில் உறுதி செய்துள்ளது. விடுதலை செய்ய அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும், அதன்மீது ஒப்புதல் அளிக்காமல் அதீத காலம் தாழ்த்துதல் என்பதையும், அதனால் கைதிக்கு ஏற்படும் மனநல பாதிப்பையும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் சிறைக் கைதியை விடுவித்துள்ளது.

அது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கும் பொருந்தும். ஏனெனில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததும் அதன் மீது இரண்டரை ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்காமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதனை குடியரசு தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். அந்த தீர்மானத்தின் மீது ஒரு வருடம் 9 மாதங்களாக குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயஸ் மற்றும் சாந்தன் ஆகியோரும் பேரறிவாளன் வழக்கை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in