Published : 13 Oct 2022 03:06 PM
Last Updated : 13 Oct 2022 03:06 PM

தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை: இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் பேருந்து நிலையங்களில் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். பெண்கள் போற்றும் தலைவியாக அவர் திகழ்ந்தார். அவரது சிந்தனையில் உருவான சீர்மிகு திட்டங்கள்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், பெண்களின் சுமைகளை குறைப்பதற்குக் கொண்டு வரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள்,வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் போது, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு ஏதுவாக மறைவிட வசதியினை பேருந்து நிலையங்களில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தாய்மை உணர்வுடன், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் தான் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம்.

2015-ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கென்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்த ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும், இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், தூர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது. மேலும், அப்பகுதிகள் அசுத்தமாகவும் காணப்படுகிறது.

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். நல்ல கருத்துகளை யார் சொன்னாலும் விரும்பியவர், விரும்பாதவர் என எண்ணாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். அண்ணாவின் வழியை கடைபிடிப்போம் என்று சொல்பவர்கள், நாங்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், தொடர்ந்து அதிமுக அரசும், மக்கள் நலன் பார்த்து பார்த்து திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினோம். தமிழக மக்களும் அத்திட்டங்களால் பயனடைந்தனர். அந்தத் திட்டங்களை திமுக அரசு முடக்கிப் போட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்ட திட்டங்களை முடக்கும் போது, அவர்களுடைய வேதனையின் வெளிப்பாட்டை உங்களுக்கு, தேர்தல் மூலம் விரைவில் திருப்பித் தருவார்கள். இது வெகு தொலைவில் இல்லை.

தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலுள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x