

சென்னை: வரும் 2023-ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களாக 24 நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலர்இறையன்பு வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் ஏப்ரல் 1-ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் நாள் தவிர, மற்ற பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் மூடப்பட வேண்டும். இதுதவிர, அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளும் மூடப்பட வேண்டும்.
இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள விடுமுறை தினங்களில், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய முக்கிய விழா நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளில் வருகிறது. ரம்ஜான்,முகரம் பண்டிகைகள் சனிக்கிழமை விடுமுறை நாளில் வருகிறது. பொங்கல், கிறிஸ்துமஸ், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை வருகின்றன.