Published : 13 Oct 2022 06:28 AM
Last Updated : 13 Oct 2022 06:28 AM

அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள 2 சிலைகளை மீட்க தமிழக அரசிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

யோகநரசிம்மர், விநாயகர் சிலைகள்

சென்னை: திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் விஷ்ணு, தேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ம்ஆண்டு புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதியப்பட்டு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையில், கோயிலில் திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த 3 சிலைகளை போல, மீதமுள்ள யோக நரசிம்மர், விநாயகர், நடனம் சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்று விஷ்ணு, நடனம் கிருஷ்ணா ஆகிய 6 சிலைகளும் திருடப்பட்டன. அடுத்தகட்ட விசாரணையில் 9 சிலைகளும் போலியானவை என்று தெரிந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள இந்தோ–பிரெஞ்சு கலாச்சார மையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் போலீஸார் சிலைகளை தேடத் தொடங்கினர்.

அதன்படி 6 சிலைகளில் யோக நரசிம்மர், விநாயகர் ஆகிய இரண்டு சிலைகளும் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலுக்குரிய 2 சிலைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில், சிலைகளை அமெரிக்காவில் இருந்து தமிழகம் கொண்டுவருவதற்கான ஆவணங்களை தயாரித்து தமிழக அரசிடம் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சமர்ப்பித்துள்ளனர். விரைவில் அந்த சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x