

சென்னை: நவீன மயமாக்குதல் என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில்வே துறையை மத்திய அரசு தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர் லால், பால் மாக்ஸ்வெல் ஜான்சன் உட்பட100-க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கண்ணையா கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பிரதமரும், ரயில்வே அமைச்சரும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது என்கின்றனர். ஆனால், நவீன மயமாக்குதல் என்ற பெயரில்ரயில்வே துறையை தனியார்மயமாக்கி மக்களை மத்திய அரசுஏமாற்றி வருகிறது. 150 சுற்றுலாரயில்களை தனியாருக்கு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் ஒருரயிலை தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ரயிலை அரசுஇயக்கினால் ரூ.28 லட்சம்தான் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ஆனால், மக்களிடம் இருந்து தனியார் நிறுவனம் ரூ.44 லட்சம் வசூலிக்கிறது.
ரூ.98 கோடி ரூ.137 கோடியானது: தேசியமயமாக்கல் என்ற பெயரில் 150 ரயில்கள், 450 ரயில்நிலையங்களை தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. 200 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இதே ‘வந்தே பாரத்’ ரயிலை நமது ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்தபோது, ரூ.98 கோடிதான் செலவானது. ஆனால், இப்போது அந்த பணியை தனியாரிடம் கொடுத்துள்ளனர், அவர்கள் அந்த ரயிலை தயாரித்துரூ.137 கோடிக்கு ரயில்வே அமைச்சகத்துக்கு விற்கப்போகின்றனர். சென்னைக்கு 5 முதல் 6 வந்தேபாரத் ரயில்கள் விரைவில் வரும்என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சாதாரண பொது வகுப்பு பெட்டியோ, தூங்கும் வசதி கொண்ட பெட்டியோ கிடையாது. முழுவதும் குளிர்சாதனம் பொருத்திய தூங்கும் வசதி பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்பதால், மக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, கட்டணத்தை குறைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே தனியார்மயமாவதை தடுக்க, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அவர் கூறினார்.